''இரட்டை இலை சின்னம் வாங்கியது நாங்க தான்''; ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் திண்டுக்கல்லில் பரபரப்பு


இரட்டை இலை சின்னம் வாங்கியது நாங்க தான்; ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் திண்டுக்கல்லில் பரபரப்பு
x

‘‘இரட்டை இலை சின்னம் வாங்கியது நாங்க தான்’’ என்ற வாசகத்துடன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

''இரட்டை இலை சின்னம் வாங்கியது நாங்க தான்'' என்ற வாசகத்துடன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒற்றை தலைமை சர்ச்சை

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இரட்டை தலைமை இருப்பதால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்ற சர்ச்சை எழுந்தது. எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல் ஒற்றை தலைமை முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இந்த கோரிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டு ஒற்றை தலைமை விவகாரம் அ.தி.மு.க.வில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஆதரவு, எதிர்ப்பு போஸ்டர்கள்

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 23-ந்தேதி சென்னையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூடியது. இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றை தலைமைக்கு கட்சியினர், தொண்டர்களிடையே ஆதரவு பெருகியது. இதனால் கூட்டத்தைவிட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வெளியேறினர்.

கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் தமிழகம் முழுவதும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியும், துண்டு பிரசுரம் வினியோகம் செய்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இரட்டை இலை சின்னம்

அதன்படி திண்டுக்கல் பஸ் நிலையத்தில், எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள சுற்றுச்சுவரில் இன்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

அந்த போஸ்டரில் 'இரட்டை இலை சின்னம் வாங்கியது நாங்க தான்' 'எவனுக்கும் விட்டுத்தர மாட்டோம் எவனுக்கும் அஞ்சமாட்டோம்' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

திண்டுக்கல்லில் பரபரப்பு

மாநில முக்குலத்தோர் இளைஞர் பாசறை சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இடம்பெற்றிருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி படம் இல்லை. திண்டுக்கல் மட்டுமின்றி சின்னாளப்பட்டியிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

திண்டுக்கல் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ., நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story