மளிகை கடைகளில் திருடிய 3 வாலிபர்கள் கைது


தூத்துக்குடியில் மளிகை கடைகளில் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மளிகை கடைகளில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.36 ஆயிரம் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருட்டு

தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் பெருமாள் (வயது 39). இவர் தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றாராம். நேற்று முன்தினம் காலையில் கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. கடையின் உள்ளே சென்ற பார்த்த போது, கடையில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இதே போன்று தூத்துக்குடி பிரையண்ட் நகர் 3-வது தெருவில், பிரையண்ட்நகர் 7-வது தெருவை சேர்ந்த பாண்டி மகன் பரமேஸ்வரன் (54) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து உள்ளனர். அங்கு கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள கைக்கெடிகாரத்தையும் திருடி சென்று உள்ளனர்.

3 வாலிபர்கள் கைது

இது குறித்த புகார்களின் பேரில் தென்பாகம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராம்குமார் (22), தூத்துக்குடி அழகேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த பாண்டியராஜ் மகன் பாஸ்கர் (23) மற்றும் தூத்துக்குடி 2-வது ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த முத்து மகன் செல்வராஜ் (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து 2 மளிகை கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட ரூ.36 ஆயிரம் பணம், கைக்கெடிகாரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ராம்குமார், செல்வராஜ், பாஸ்கர் ஆகியோர் மீது ஏற்கனவே தலா 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மளிகை கடைகளில் திருடிய வாலிபர்கள் உடனடியாக கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.


Next Story