ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டதா?


ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டதா?
x

கூத்தாநல்லூர் அருகே, காணாமல் போன ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த ஆடுகளின் தோல்கள் தோட்டத்தில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே, காணாமல் போன ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த ஆடுகளின் தோல்கள் தோட்டத்தில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மாயமான ஆடுகள்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடபாதிமங்கலத்தில் அப்பகுதி மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளும் வகையில் தங்கள் வீடுகளில் கொட்டகை அமைத்து, ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், திரும்ப வீடு திரும்புவதில்லை. காலையில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் மாலையில் வீடு திரும்பாமல் மாயமாகி விடுவது வாடிக்கையாக இருந்தது. இதனால், ஆடுகள் வளர்ப்போர் கவலையடைந்தனர்.

ஆட்டின் தோல்கள்

இந்த நிலையில், வடபாதிமங்கலத்தில் உள்ள உச்சுவாடி, புனவாசல் தெருக்களில் உள்ள சிலரின் ஆடுகள் கடந்த சில நாட்களாக காணாமல் போனது. இதனால், பதற்றம் அடைந்த ஆட்டின் உரிமையாளர்கள் இரவு பகலாக பல இடங்களில் தேடினர். ஆனால் ஆடுகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், வடபாதிமங்கலத்தில் உள்ள ஒருவரது வீட்டு தோட்டத்தில் உறிக்கப்பட்ட ஆட்டின் தோல்கள் வைக்கப்பட்டு உள்ளதாக, மாயமான ஆடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து மாயமான ஆடுகளின் உரிமையாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மாயமான தங்களின் ஆடுகள், இறைச்சிக்காக வெட்டப்பட்டு, அதன் தோல்கள் மட்டுமே கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிலர் செல்லமாக தாங்கள் வளர்த்த ஆட்டை, தோல் உறித்த கோலத்தில் பார்த்து அழுதனர். இதனால், வடபாதிமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story