அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல்
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அரசு பஸ் மீது மர்மஆசாமிகள் கல்வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில்:
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அரசு பஸ் மீது மர்மஆசாமிகள் கல்வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புத்தாண்டு கொண்டாட்டம்
குமரி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவில் இருந்தே புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. அந்த சமயத்தில் இளைஞர்கள் சிலர் புத்தாண்டை வரவேற்க மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் அங்குமிங்கும் சுற்றி வந்ததையும், சிலர் தள்ளாடியபடி நடந்து சென்றதையும் காண முடிந்தது.
இந்தநிலையில் இரணியல் அருகே உள்ள மடவிளாகம் பகுதியில் நள்ளிரவு நாகர்கோவிலில் இருந்து மிடாலத்துக்கு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருவட்டார் ஆனையடி பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓட்டினார். கண்டக்டராக ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் இருந்தார்.
பஸ் மீது கல்வீச்சு
அப்போது பஸ் மடவிளாகம் பகுதியில் சென்றபோது திடீரென நடந்து சென்று கொண்டிருந்த 2 மர்ம நபர்கள் கல்லால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது எறிந்துள்ளனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக நொறுங்கியது. அதே சமயத்தில் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு பயணிகள் சத்தம் போட்டனர். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
போலீஸ் தேடுகிறது
இதுகுறித்து பஸ் டிரைவர் சுபாஷ் இரணியல் போலீசில் புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபா்களை தேடி வருகின்றனர். மதுபோதையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கல்வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அரசு பஸ் மீது மர்ம நபர்கள் கல்வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.