சூளகிரி அருகே பயங்கரம் : கல் உடைக்கும் தொழிலாளி தலை துண்டித்து கொலை போலீசார் தீவிர விசாரணை


சூளகிரி அருகே பயங்கரம் : கல் உடைக்கும் தொழிலாளி தலை துண்டித்து கொலை போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 25 Jun 2023 1:15 AM IST (Updated: 25 Jun 2023 10:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகே கல் உடைக்கும் தொழிலாளி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலை இல்லாமல் ஆண் உடல்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி-பேரிகை செல்லும் சாலையில், பீலாளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விபத்தில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தலை இல்லாமல் உடல் மட்டும் கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து உடலை போலீசார் கைப்பற்றி ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் ஆணின் தலை மட்டும் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கல் உடைக்கும் தொழிலாளி

தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது உத்தனப்பள்ளி அருகே அகரம் கிராமத்தை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி முருகேசன் (வயது32) என்பது தெரிந்தது. மேலும் அவருக்கு, தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், 2 மகள்கள் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் துண்டிக்கப்பட்ட தலையை பார்த்து கதறி அழுதனர். முருகேசன், நேற்று முன்தினம் தனது மாமியார் ஊரான ஜோகிரி பாளையம் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பும் வழியில் அவரை மர்ம நபர்கள் தலையை துண்டித்து கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story