ஆத்தூரில் ரெயில் மீது கல்வீச்சு; பெண் படுகாயம்-மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு


ஆத்தூரில் ரெயில் மீது கல்வீச்சு; பெண் படுகாயம்-மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
x

ஆத்தூரில் ரெயில் மீது கல்வீசியதில் பெண் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

சேலம்

ஆத்தூர்:

ரெயில் மீது கல்வீச்சு

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து ஆத்தூர், சேலம் வழியாக பெங்களூருவுக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று அதிகாலை காரைக்காலில் இருந்து பயணிகள் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் கடலூர் மாவட்டம் வேப்பூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த முத்துசாமி, தனது மனைவி அஞ்சலம் (வயது 55), மகள் இளஞ்சியம் ஆகியோருடன் கூலி வேலைக்காக பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார்.

காலை 11.30 மணி அளவில் ரெயில் சேலம் மாவட்டம் ஆத்தூர் லீ பஜார் பகுதியில் சென்றது. அப்போது மர்ம நபர்கள் சிலர் திடீரென ரெயில் மீது கற்களை வீசினர். இந்த கல்வீச்சில் முத்துசாமி மனைவி அஞ்சலம் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தனிப்படை அமைப்பு

இதைத்தொடர்ந்து ஆத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது. ரெயில்வே போலீசார் படுகாயம் அடைந்த அஞ்சலத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் ரெயில் மீது கல்வீசிய மர்ம நபர்களை பிடிக்க சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கற்களை வீசிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆத்தூரில் ரெயில் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story