பழமையான நடுகல் சிலை கண்டுபிடிப்பு
பரமக்குடி அருகே பழமையான நடுகல் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி அருகே பழமையான நடுகல் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடுகல்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வழிமறிச்சான் கிராமத்தில் ஒரு பழமையான நடுகல் சிலை இருப்பதாக அக்கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் தெரிவித்தார். இதையடுத்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன், மீனாட்சிசுந்தரம் மற்றும் வழிமறிச்சானை சேர்ந்த சிவா, சக்தி முருகன் ஆகியோர் அங்கு கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த சிலை ஒரு உயர் குடியை சேர்ந்த மூதாட்டிக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பதை கண்டறிந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- பொதுவாக நடுகல் என்பது முற்காலங்களில் வீர தீர செயல்களான போர்களில் ஈடுபடும் வீரர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கு எதிரான சண்டைகளில் வெற்றி பெறுபவர்களுக்கோ அல்லது சண்டையில் இறப்பவர்களுக்கோ அல்லது சமூகத்தில் பெரிதும் போற்றத்தக்க நபர்களுக்கோ நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
மூதாட்டியின் சிற்பம்
தற்போது நாங்கள் கண்டறிந்த சிற்பமும் அவ்வகையை சேர்ந்ததே. இந்த நடுகல் சிற்பம் இரண்டரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் இரண்டு கைகளிலும் காப்பும், கை வளையல்களும் அணிந்தபடியும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், ஆபரணங்களும், நீண்ட காதும் தெளிவாக செதுக்கப்பட்டுள்ளது. இடையில் இடைக்கச்சை அணிந்தபடியும், இரு கால்களிலும் கழலைகள் அணிந்தபடியும் சிலை நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது.
இடது கையில் ஊன்றுகோல் தடியை பிடித்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. நெற்றியில் திலகம் செதுக்கியிருப்பது கூடுதல் சிறப்பாகும். இந்த புடைப்பு சிற்பம் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டியின் சிற்பமாகும். இதன் வடிவமைப்பும், அணிந்துள்ள ஆபரணங்களையும் பார்க்கும் போது ஒரு உயர் குடியை சேர்ந்த பெண்ணாகவோ அல்லது சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்க பெண்மணியாகவோ இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. தற்போது இந்த நடுகல்லை பாட்டி கிழவி அம்மன் என்ற பெயரில் அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினா்.