பைபாஸ் ேராட்டில் நின்று நெடுந்தூர பஸ்களுக்காக அல்லல்படும் மக்கள்


ெநடுந்தூர பஸ்களுக்காக பைபாஸ் ேராட்டில் நின்று மக்கள் அல்லல்படுகின்றனர்.

விருதுநகர்


கந்தன் கருணை சினிமாவில் முருகப்பெருமான், பிரம்மாவை அழைப்பார். மீண்டும் கூப்பிட்டும் பிரம்மா ஏதோ ஒரு கவனத்தில் அங்கிருந்து செல்வார். இதனால் சற்று சினம் கொண்ட முருகப்பெருமான், பிரம்மாவை பார்த்து, நான்கு முகங்கள் இருந்தும், கவனிக்கவில்லையா அல்லது கவனம் இங்கில்லையா? என்று கேட்பது போன்று வசனம் வரும்.

சரி விஷயத்துக்கு வருவோம். அந்த நான்கு முகங்கள் போன்று நாலாபுறமும் இருந்து வரும் பஸ்கள் விருதுநகருக்குள் வந்து செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்றுக்கு இரண்டு பஸ் நிலையங்கள் அங்கு கட்டப்பட்டு உள்ளன. ஆனால், பயணிகள் ரோட்டில் நின்றுதான் நெடுந்தூர பஸ்களில் ஏறி பயணம் செய்யும் நிலை பல்லாண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

இதற்கு அந்த சினிமா வசனத்தை அப்படியே எடுத்துக்கொண்டால், இதை அதிகாரிகள் கவனிக்கவில்லையா அல்லது கவனம் இங்கில்லையா? என்றுதான் கேட்க தோன்றுகிறது. இத்தனைக்கும் விருதுநகர் ஒன்றும் சாதாரண ஊர் அல்ல.

மாவட்ட தலைநகரம், வர்த்தக நகரம், கல்வி நகரம், சுற்றுவட்டார மக்களின் போக்குவரத்தின் ஆதாரம் என கூறிக்ெகாண்டே செல்லலாம். சரி இந்த நகருக்கு இப்படி ஒரு நிலை ஏன் வந்தது?

வாருங்கள் அலசலாம்...

விருதுநகர் கடந்த 1985-ம் ஆண்டு மாவட்ட தலைநகரானது. 1997-ம் ஆண்டு விருதுநகர் மண்டல போக்குவரத்து கழகம் தனி போக்குவரத்து கழகமாக உருவானது.

மாவட்ட தலைநகர்

இந்த நிகழ்வுகளுக்கு முன்பு நெடுந்தூர பஸ்கள் விருதுநகர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் நிலை இருந்தது.

ஆனால் மாவட்ட தலைநகரான பின்பு விருதுநகருக்குள் வந்து செல்லவில்லை. தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகம் விருதுநகரில் இருந்து சென்னைக்கும், சிவகாசியில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு, ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளுக்கும் விரைவு பஸ்களை இயக்கி வந்தது. தொடக்கத்தில் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் விரைவு போக்குவரத்து கழக அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் அந்த அலுவலகம் மூடப்பட்டு, புதிய பஸ் நிலையத்தில் விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கான முன்பதிவு அலுவலகம் மட்டும் செயல்பட தொடங்கியது.

புறக்கணிப்பு

காலப்போக்கில் விருதுநகர் மற்றும் சிவகாசியில் இருந்து இயக்கப்பட்டு வந்த அனைத்து விரைவு போக்குவரத்து கழக பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதற்கு மக்கள் பிரதிகள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்காததுதான், பஸ் போக்குவரத்தில் விருதுநகர் பின்னுக்கு போக காரணமானதாக சொல்கிறார்கள்.

விரைவு பஸ்கள் அல்லாது, விருதுநகரில் இருந்து பொள்ளாச்சி, ஈரோடு, கோவை உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன..

இந்த பஸ்களும் பின்னர் சிவகாசிக்கு மாற்றப்பட்டு சிவகாசியில் இருந்து இயக்கப்படுகின்றன. அதிகாலையில் மட்டும் இந்த பஸ்கள் விருதுநகர் பழைய பஸ் நிலையம் வழியாக வந்து செல்லும் நிலையில் பிற நேரங்களில் விருதுநகருக்குள் வருவது கேள்விக்குறியாகி விட்டது. பொதுவாக நெடுந்தூர பஸ்கள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட தலைநகராக இருந்தும் விருதுநகருக்கு வராமல் புறக்கணித்து வருகின்றன.

பெரும் அவதி

அனைத்து பஸ்களும் புறவழிச்சாலை வழியாக செல்லும் நிலை தொடர்கிறது. இதுகுறித்து மக்கள் அமைச்சர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், போக்குவரத்து கழகத்தினருக்கும், தமிழக அரசுக்கும் பலமுறை முறையீட்டு மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை தொடர்கிறது.

இதனால் மாவட்ட மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட அமைச்சர்கள் விருதுநகரில் இருந்து ஏற்கனவே இருந்தபடி விரைவு போக்குவரத்து கழக பஸ்களை இயக்கவும் அனைத்து நெடுந்தூர பஸ்களும் விருதுநகருக்குள் வந்து செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமே வணிகர்களும், பெண்களும் பாதுகாப்பான முறையில் தொலைதூர நகரங்களில் இருந்து இரவு நேரங்களில் விருதுநகருக்குள் வர வாய்ப்பு ஏற்படும்.

விரைவில் செயல்படுத்த நடவடிக்கை

இதுகுறித்து கலெக்டர் மேகநாத ரெட்டி கூறியதாவது:-

விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்துவது தொடர்பாக கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தின் முடிவில் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய நிலை இருந்தது. எனவே வரும் வாரத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்பட்டு விரைவில் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

மாற்று கருத்து

சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

விருதுநகர் புதிய பஸ்நிலையம் செயல்படுத்துவது தொடர்பாக கலெக்டர் தலைமையில் தொடர்புடைய அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சில மாற்று கருத்துக்கள் கூறப்பட்டன.

எனவே அடுத்து அனைத்து அதிகாரங்களுடன் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும். தற்போதைய நிலையில் விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கில் இருந்து வரும் புறநகர் பஸ்கள் புறவழிச்சாலையாக சென்று எம்.ஜி.ஆர். சாலை வழியாக புதிய பஸ் நிலையம் வந்து செல்லவும், பழைய பஸ் நிலையத்திலிருந்து அனைத்து டவுன் பஸ்களை இயக்கவும், பழைய, புதிய பஸ் நிலையங்களுக்கு இடையே இணைப்பு பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் புதிய பஸ் நிலையம் செயல்பட உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள்ஒத்துழைப்பு

வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பாஸ்கரன்:-

இப்பிரச்சினை பற்றி முடிவு செய்ய கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் உறுதியாக நடவடிக்கை எடுக்கும். பொதுமக்களும் அதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அதன் மூலமே புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு ஏற்படும்.

நகர் விரிவாக்கம்

வியாபாரி அந்தோணி:-

விருதுநகர் புதிய பஸ்நிலையத்தை செயல்படுத்த ஏற்கனவே கடந்த காலங்களில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தும் செயல்பாட்டுக்கு வராத நிலை நீடிக்கிறது. தற்போது அமைச்சர்களின் அறிவுறுத்தலின் பேரில் கலெக்டர், புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். புதிய பஸ் நிலையம் செயல்பட்டால் தான் நகர் விரிவாக்கம் பெற வாய்ப்பு ஏற்படும். மேலும் பொதுமக்கள் வசதிக்காக புதிய பஸ் நிலையத்திற்கும், பழைய பஸ் நிலையத்திற்கு இடையில் அதிக எண்ணிக்கையில் இணைப்பு பஸ்கள் இயக்க வேண்டும். தனியார் பஸ் உரிமையாளர்களும், போக்குவரத்துக் கழக ஊழியர்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியமாகும். ஏற்கனவே அனைத்து பஸ்களும் விருதுநகர் புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் புதிய பஸ்நிலையத்திற்கே வந்து சேர வேண்டும் என நீதிமன்ற வழிகாட்டல் உள்ளது. இதனை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Related Tags :
Next Story