சிவகாசி பஸ் நிலையம் வெளியே மினி பஸ்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்
போக்குவரத்து ெநரிசலை தவிர்க்க சிவகாசி பஸ்நிலையம் வெளியே மினி பஸ்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி
போக்குவரத்து ெநரிசலை தவிர்க்க சிவகாசி பஸ்நிலையம் வெளியே மினி பஸ்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ் நிலையம்
சிவகாசி பஸ் நிலையத்துக்கு தினமும் 230-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து, செல்கிறது. சிவகாசியை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அரசு பஸ் மற்றும் மினி பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நகரப்பகுதிக்குள் செல்ல விரும்புபவர்கள் ஆட்டோவில் செல்கிறார்கள்.
பஸ் நிலையத்துக்கு 3 இடங்களில் வாசல் இருக்கிறது. இதில் அனைத்து பஸ்களும் உள்ளே செல்ல வசதியாக சாத்தூர் ரோட்டில் ஒரு வாசலும், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜாபாளையம், வெம்பக்கோட்டை, சங்கரன்கோவில், ஆலங்குளம் செல்லும் பஸ்கள் ஒரு வாசலிலும், விருதுநகர், மதுரை மார்க்கமாக செல்லும் பஸ்கள் ஒரு வாசலிலும் வெளியேறி வருகிறது.
நெருக்கடி
இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ்கள் வெளியேறும் பகுதி மிகவும் குறுகலாக இருக்கிறது. இந்த பகுதியில் மினி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த பகுதியில் மினிபஸ்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் செயற்கையாக அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த நெருக்கடி அதிகமாக இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு வந்து செல்ல பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இதை தவிர்க்க மினி பஸ்கள் பஸ் நிலையத்தின் உள்ளே நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல முறை சுட்டிக்காட்டியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்தநிலையில் சிவகாசி பஸ் நிலையத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி ஆய்வு செய்து இப்பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.