புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மதுரை மாவட்டத்தில் சேமிப்பு கிடங்குகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மதுரை மாவட்டத்தில் சேமிப்பு கிடங்குகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மற்றும் மதுரை மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம், அறிவியல் முறையில் சிறந்த கட்டுமானத்தை ஏற்படுத்தி, வேளாண் பொருட்களின் தரம் மற்றும் அளவைப் பாதுகாக்க வழிவகை செய்து வருகிறது. விவசாயிகள் மற்றும் விவசாயத்தைச் சார்ந்த வர்த்தக நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் 60 இடங்களில் 269 கிடங்குகள் உள்ளன.

இந்த நிலையில் 2021-22-ம் ஆண்டிற்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலாக 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிட்டங்கி நிறுவப்படும் என்றும்; 2022-2023-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் ராணிப்பேட்டை மற்றும் திருமங்கலம் சேமிப்பு கிடங்கு வளாகங்களில் காலியாகவுள்ள இடத்தில் கூடுதலாக 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

திறந்து வைத்தார்

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 1 கிடங்கு; ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் 1 கிடங்கு; மதுரை மாவட்டம் கப்பலூர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் 1 கிடங்கு, என மொத்தம் ரூ.7.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 கிடங்குகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

மேலும், திருப்பூர் மாவட்டம் பல்லடம், திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி ஆகிய இடங்களில் மொத்தம் ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் தலா 3,400 டன் கொள்ளளவுடன் கட்டப்படவுள்ள 2 சேமிப்பு கிடங்குகளுக்கான கட்டும் பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

பணிநியமன ஆணை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெகநாதன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story