இன்று கரையை கடக்கிறது 'மோக்கா' புயல்.! தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை,
மோக்கா புயல் வடக்கு திசையில் நகர்ந்து நேற்று முன் தினம் மிகத் தீவிர புயலாக மாறி மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. அதாவது போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கி.மீ. மேற்கு-வடமேற்கே நிலை கொண்டிருந்தது.
இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது மணிக்கு 180 கி.மீ. முதல் 190 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 210 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.