எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை


எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை
x

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதனை கண்டித்து அந்த கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதனை கண்டித்து அந்த கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

என்.ஐ.ஏ. சோதனை

கடந்த 2019-ம் ஆண்டு கும்பகோணம் அருகே திருப்புவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது. இந்த கொலை தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதன்படி நெல்லை மேலப்பாளையம் ஹக் காலனியில் அமைந்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

4 மணி நேரம் விசாரணை

சென்னை தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் ஒரு பெண் அதிகாரி உள்பட மொத்தம் 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர், அதிகாலை 5.30 மணியளவில் நெல்லை முபாரக் வீட்டுக்கு வந்தனர். அவர்கள், வீட்டில் இருந்த நெல்லை முபாரக்கிடம் விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை 9.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

தொண்டர்கள் போராட்டம்

முன்னதாக, நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை நடத்துவதை அறிந்த எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் உஸ்மானி, பொதுச்செயலாளர் கனி ஆகியோர் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளை கண்டித்தும், மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நெல்லை முபாரக் தனது வீட்டில் இருந்து வெளியே வந்து தொண்டர்களை அமைதிப்படுத்தினார். தொடர்ந்து கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சோதனையையொட்டி மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பின்னர் நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் காழ்ப்புணர்ச்சி

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை என்பது பிரதமர் நரேந்திர மோடியின் விசாரணை என்றுதான் சொல்ல வேண்டும். தஞ்சாவூர் மாவட்ட வழக்கை தொடர்புபடுத்தி விசாரணை நடத்தியதாக கூறுகிறார்கள். சிறுபான்மை இயக்கங்களை அடக்கி ஒடுக்குவதற்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு விசாரணை நடத்தி உள்ளனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கும், இந்த வழக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த சோதனையின்போது எனது செல்போன் தவிர வேறு எதையும் எடுத்து செல்லவில்லை. அமலாக்கத்துறையை போன்று என்.ஐ.ஏ.வை கொண்டும் சிறுபான்மை அமைப்புகளை அச்சுறுத்த நினைக்கிறார்கள். இந்த வழக்கை நீதிமன்றம் மூலம் நாங்கள் சந்திப்போம். மக்கள் மன்றம் மூலம் என்.ஐ.ஏ. முகத்திரையை கிழிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story