வயலிலேயே நனைந்து வீணாகும் வைக்கோல்கட்டுகள்
வயலிலேயே நனைந்து வீணாகும் வைக்கோல்கட்டுகள்
மெலட்டூர்
மெலட்டூர் பகுதியில் தொடர் மழையால் வயலிலேயே நனைந்து வைக்கோல்கட்டுகள் வீணாகி வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறுவடை பணி பாதிப்பு
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர், தேவராயன்பேட்டை, திருவையாத்துகுடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், கிடங்காநத்தம், கோடுகிளி உள்பட பல பகுதியில் குறுவை முன் பருவத்தில் நடவு செய்யப்பட்டது. அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் இருந்த பலநூறு ஏக்கர் நெற்பயிர்கள் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வயல்களில் மழைநீர் தேங்கியதால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது.
வைக்கோல்கட்டுகள் வீணாகி சேதம்
மேலும் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் கிடைத்த வைக்கோல்களை எந்திரங்கள் மூலம் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்மழையால் வைக்கோல்கட்டுகள் வயலிேலயே நனைந்து பயன்படுத்த முடியாத அளவில் வீணாகி சேதமடைந்து வருகிறது. இ்தனால் குறுவை விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.12ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர்மழையால் பயிர்கள் வயலிலேயே சாய்ந்ததால் மகசூல் குறைந்த நிலையில், வைக்கோல் மூலம் கிடைக்க கூடிய வருவாயும் கிடைக்காதது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
உரிய இழப்பீடு தொகை
இந்த ஆண்டு குறுவை முன் பருவத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் தொடர்மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.