7 பேரை கடித்து குதறிய தெருநாய்


7 பேரை கடித்து குதறிய தெருநாய்
x

சின்னாளப்பட்டியில், 7 பேரை தெருநாய் கடித்து குதறியது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பேரூராட்சி பகுதியில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. நடந்து செல்வோரையும், மோட்டார் சைக்கிள்களில் செல்வோரையும் அவை விரட்டி, விரட்டி கடிப்பது வாடிக்கையாகி விட்டது. நாய்களுக்கு இடையே சண்டை போட்டு ஓடும்போது வாகனங்கள் மீது மோதி விபத்து நடப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் சின்னாளப்பட்டி பஸ்நிலையம் அருகே உள்ள தெருவில் சுற்றித்திரிந்த நாய், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 4 குட்டிகளை ஈன்றது. நேற்று காலை திடீரென அந்த நாய், அந்த வழியாக சென்றவர்களை கடித்து குதறியது. அதன்படி கிருஷ்ணன் (வயது 43), குமாரி (50), முத்தம்மாள் (65) உள்ளிட்ட 7 பேரை அந்த நாய் கடித்தது. இவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பேரூராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ் வீட்டுக்கு திரண்டு சென்று தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று முறையிட்டனர். புளூ கிராஸ் அமைப்பு மூலம் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதற்கிடையே நேற்று மதியம் 2 மணி அளவில் 7 பேரை கடித்த நாய், பொம்மையசாமி கோவில் அருகே அடிப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அந்த நாய் சாவுக்கான காரணம் தெரியவில்லை. கடித்து குதறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நாயை யாரேனும் அடித்து கொன்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.


Next Story