ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அருப்புக்கோட்டை நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அருப்புக்கோட்டை,
ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அருப்புக்கோட்டை நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகரசபை கூட்டம்
அருப்புக்கோட்டை நகர்மன்ற குழுவின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகள் வருமாறு:-
நகர்மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன்:- கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கழிவுநீர் வாருகாலில் துப்புரவு பணி மேற்கொள்ளாமல் சுகாதாரமற்று கிடக்கிறது. உச்சினிமாகாளி அம்மன் கோவில் பின்புறம் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
ரேஷன்கடை
முருகானந்தம்:- தூம்பைக்குளம் கண்மாயில் கட்டிட கழிவுகளை கொட்டி கண்மாயை மூடி வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் கண்மாய் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.
கண்ணன்:- காந்திநகர் புறநகர் பஸ் நிறுத்தம் இரவு நேரங்களில் குடிமகன்களின் பாராக மாறியுள்ளது. இதனால் பயணிகள், அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். பைபாஸ் சாலை அருகே குப்பைகள் தேங்கி சுகாதாரமற்று கிடக்கிறது.
சங்கீதா:- எனது வார்டில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்.
டுவிங்கிளின்ஞான பிரபா:- பெர்க்கின்ஸ்புரத்தில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எங்கள் வார்டில் தனியாக ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்.
அனைவருக்கும் நன்றி
தலைவர் சுந்தரலட்சுமி:- நகர்மன்ற உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
சூறாவளி காற்றால் நகரில் சேதமடைந்த பகுதிகளை இரவு பகல் என்று பாராமல் துரிதமாக செயல்பட்டு பணி மேற்கொண்ட நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தாக நன்றி தெரிவித்தனர்.