வைகாசி பெருவிழாவையொட்டிகடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தெருவடைச்சான் உற்சவம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


வைகாசி பெருவிழாவையொட்டிகடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தெருவடைச்சான் உற்சவம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்

கோபுர தரிசனம்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான வைகாசி பெருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக வண்ணார மாரியம்மன் திருவிழா, எல்லைக்கட்டுதல் நிகழ்ச்சி, பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டுதல் உற்சவம், பிடாரி அம்மன் உற்சவம், விநாயகர் திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி அன்று பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்கார, தீபாராதனை நடந்தது. அதையடுத்து சூரிய பிரபை, சிம்ம வாகனம், பல்லக்கு, பூத, காமதேனு, நாக வாகனங்களில் சாமி வீதி உலா வந்தது. 5-ம் திருவிழாவான நேற்று காலை அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடந்தது. இதில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் கோபுரம் முன்பு நின்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தெருவடைச்சான் உற்சவம்

இதையடுத்து இரவு தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. இதற்காக பாடலீஸ்வரர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சாமி மேள, தாளங்கள் முழங்க தெருவடைச்சான் சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சாமி தேரடி தெரு, சங்கரநாயுடு தெரு, வரதராஜபெருமாள் கோவில் தெரு, போடிச்செட்டி தெரு வழியாக வந்து மீண்டும் தேரடி தெருவை வந்தடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யானை வாகனத்தில் நால்வர் புறப்பாடு, இரவு வெள்ளி ரதம், இந்திர விமானத்தில் சாமி வீதி உலா, நாளை (புதன்கிழமை) திருக்கல்யாணம் பரிவேட்டை, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) குதிரை வாகனம், இரவு பிச்சாண்டவர் புறப்பாடு தங்க கைலாய வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.

தேர்த்திருவிழா

2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடக்கிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாடலீஸ்வரர், பெரியநாயகி எழுந்தருளுகிறார்கள். தொடர்ந்து அங்கு கூடி நிற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். அப்போது தேரில் பாடலீஸ்வரர், அம்மனுடன் ஆடி அசைந்து வரும் காட்சியை திரளான பக்தர்கள் கண்டு ரசிப்பார்கள்.

அதன்பிறகு 3-ந்தேதி நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி, முத்துப்பல்லக்கு, 4-ந்தேதி தெப்ப உற்சவம், 5-ந்தேதி ஞானப்பால் உண்ட ஐதீகம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா காட்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் சந்திரன், கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story