திருச்செந்தூரில் சுவாமி சிங்கக் கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் வீதி உலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா 2-ம் நாளான நேற்று சுவாமி சிங்கக் கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் வீதி உலா வந்தனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா 2-ம் நாளான நேற்று சுவாமி சிங்கக் கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் வீதி உலா வந்தனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மாசித்திருவிழா 2-ம் நாள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 2-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
பின்னர் பகலில் சுவாமி குமரவடங்கப்பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லாக்கிலும் எழுந்தருளி தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி தாசில் ஆண்டியப்ப பிள்ளை மண்டபத்திற்கு வந்தனர். பின்னர் அம்பாள் மட்டும் உள் மாடவீதி, வெளி ரதவீதிகளில் உலா வந்து மீண்டும் மண்டபம் வந்து சேர்ந்து.
சுவாமி-அம்பாள் வீதி உலா
பின்னர் அங்கு மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்ககேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து சிவன் கோவில் சேர்ந்தார்கள்.
இன்று (திங்கள்கிழமை) இரவு சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.