தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படவுள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து பெரம்பலூர் மாவட்டத்தில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கற்பகம் எச்சரித்துள்ளார்.
ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இதனால் இத்திட்டத்திற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் குடும்ப அட்டை பதிவு செய்துள்ள ரேஷன் கடை பணியாளர் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்களை வழங்கிடவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்ப பெறவும் சிறப்பு முகாம்கள் நடத்திடவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 282 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த உகந்ததாக உள்ள சமுதாயக் கூடங்கள், அரசு பள்ளி கட்டிடங்கள், அரங்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோனேரிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே முகாம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
குடும்ப தலைவிகள் மட்டும்...
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் குறித்து கலெக்டர் கற்பகம் கூறியதாவது:- கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். (15.9.2002-க்கு முன்பு பிறந்தவர்கள்). இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு வீடாக வந்து வழங்கப்படும். விண்ணப்பம் வழங்கப்படும்போதே, முகாமிற்கு எந்த தேதியில், எந்த நேரத்தில் வர வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படும். தங்களது குடும்ப அட்டை பதிவு இருக்கும் ரேஷன் கடை அருகே உள்ள சமுதாயக்கூடம், பள்ளிகளில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு முகாம்களில் விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தெரியாதவர்களுக்கு உதவிட முகாம்களில் தன்னார்வலர்கள் இருப்பார்கள். முகாமில் குடும்ப தலைவிகளுக்கு பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்ய உள்ளதால் குடும்ப தலைவிகள் மட்டுமே முகாமிற்கு நேரில் வந்து விண்ணப்பங்களை வழங்கிட வேண்டும். வேறு யாரும் விண்ணப்பங்களை கொண்டு வரக்கூடாது. அரசின் மூலம் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்று கொள்ளப்படும். நகல் எடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
வீண் வதந்திகளை நம்பாதீர்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் 282 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி வரை முதற்கட்டமாகவும், அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 2-ம் கட்டமாகவும் விண்ணப்பங்களை பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முகாமிற்கு வரும் போது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மின்வாரிய அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட எண் உள்ள செல்போன் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
இத்திட்டம் குறித்த மேலும் தகவல்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையினை 18004254556 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது தாசில்தார் அலுவலகங்களை பெரம்பலூர் 04328-277201, வேப்பந்தட்டை 04328-264201, குன்னம் 04328-258370, ஆலத்தூர் 04328-267755 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்பாதீர்கள். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.