இழிவான, அவதூறான கருத்துகளை வெளியிடும் 'யூடியூப்' சேனல்கள் மீது கடும் நடவடிக்கை -ஐகோர்ட்டு உத்தரவு


இழிவான, அவதூறான கருத்துகளை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை -ஐகோர்ட்டு உத்தரவு
x

நீதிபதிகள், பொதுமக்களுக்கு எதிராக, ஆதாரம் இல்லாமல் இழிவாக, அவதூறாக கருத்துகளை வெளியிடும் சமூக ஊடகங்கள் (யூடியூப் சேனல்கள்) மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பெண் வக்கீல், நீதிபதிக்கு எதிராக, சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டது தொடர்பான வழக்கில் கைதான 'ரியல் எஸ்டேட்' அதிபர் ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, 'அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் சமூக வலைதள ஊடகங்களில் (யூடியூப் சேனல்) நேர்காணல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்தார்.

தமிழ்நாடு டி.ஜி.பி.யை எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்த்தார். பின்னர், அவதூறு கருத்துகளை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், இணையதள குற்றங்களை கண்காணிக்கவும், சிறப்பு பிரிவு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார்.

கடும் நடவடிக்கை

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஜி.பி. சார்பில் ஆஜரான வக்கீல், தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் (எல்காட்) வாயிலாக, ரூ.22.64 கோடி மதிப்பில், நவீன சைபர் கருவிகளை வாங்குவதற்கு முன்மொழிவுகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. உபகரணங்களை வாங்க, காலஅவகாசம் தேவைப்படுகிறது என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசியலமைப்பு பிரதிநிதிகள், நீதிபதிகள், பொதுமக்களுக்கு எதிராக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் இழிவாக, அவதுறாக கருத்துகளை வெளியிடும் சமூக ஊடகங்கள் (யூடியூப் சேனல்கள்) மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனுமதிக்க முடியாது

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமை உள்ளது. அதற்கு எதிர்மறையாக, நேர்மையற்ற கருத்துகள் கூறுவதை அனுமதிக்க முடியாது. மலிவான விளம்பரத்துக்காக, இதுபோல செயல்களில் ஈடுபடுவோரை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். இல்லையெனில், காளான் போல் பரவிவிடுவார்கள்.

சமூக அச்சுறுத்தலை கட்டுப்படுத்த, சமூக ஒழுக்கம், நல்லிணக்கத்தை பராமரிக்க, நீதித்துறை தன் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதுபோல செயல்களை கட்டுப்படுத்த, சில விதிமுறைகளை வகுக்க வேண்டும். வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story