வனவிலங்குகளுக்கு உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை
வனவிலங்குகளுக்கு உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
கூடலூர்,
கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சாலையோரங்களில் காணப்படும் மான்கள், குரங்குகள், மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டவுடன் வாகனங்களை நிறுத்தி கண்டு ரசிக்கின்றனர். இந்த சமயத்தில் குரங்குகள், மயில்கள், மான்கள் சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்து வாகனங்கள் அருகே செல்கிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வந்துள்ள உணவு மற்றும் தின்பண்டங்களை வனவிலங்குகளுக்கு அளிக்கின்றனர். இவ்வாறு தின்று பழகிய வனவிலங்குகள் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை கண்டவுடன் சாலையோரம் வந்து காத்து கிடப்பதை காண முடிகிறது. இதுபோன்ற செயலுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்துதல், அத்துமீறி நுழைதல், வனவிலங்குகளுக்கு தின்பண்டங்கள் அளித்தல் கூடாது என சாலையோரம் விழிப்புணர்வு பலகைகள் பொருத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், இந்த உத்தரவை சுற்றுலா பயணிகள் பலர் மீறுகின்றனர். எனவே, வனவிலங்குகளுக்கு உணவு அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.