அதிக மாணவர்களை ஆட்டோவில் ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை
தூத்துக்குடியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மாணவர்களை ஆட்டோவில் ஏற்றிச்செல்லும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மாணவர்களை ஆட்டோவில் ஏற்றிச்செல்லும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலெக்டர் நடவடிக்கை
தூத்துக்குடியில் அளவுக்கு அதிகாக ஆட்டோக்களில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்வதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிவர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் தூத்துக்குடியில் பள்ளி குழந்தைகளை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஏற்றி செல்வது குறித்து கண்காணிப்பதற்காக 4 குழுக்களாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
21 ஆட்டோ
அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக 21 ஆட்டோக்களில் குழந்தைகளை ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆட்டோக்கள் அனைத்தும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நேரடியாக அங்கு சென்று ஆட்டோ டிரைவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
அப்போது கலெக்டர் கூறுகையில், ஆட்டோக்களில் 5 மாணவர்களை மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும். ஆனால் பல ஆட்டோக்களில் மாணவர்கள் வெளியில் கால்களை தொங்க போட்டுக் கொண்டு செல்வதாகவும், ஆட்டோவின் வெளிப்பகுதியில் புத்தக பைகள் தொங்கவிடப்படுவதாகவும் புகார்கள் வந்து உள்ளன.
கடும் நடவடிக்கை
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி செல்லக்கூடாது. இனிமேல் அதிக அளவில் குழந்தைகளை ஏற்றி சென்றால் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதே போன்று பெற்றோர் ஒரே ஆட்டோவில் அதிக அளவில் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக வரும் காலங்களில் தொடர்ந்து ஆட்டோக்கள் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்பிறகு பிடிபட்ட 21 ஆட்டோக்களும் விடுவிக்கப்பட்டன.