வியாபாரிகள் இடைத்தரகர்களாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை


வியாபாரிகள் இடைத்தரகர்களாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை
x

பொங்கல் பரிசுக்காக விவசாயிகளிடம் இருந்து கரும்பு நேரடியாக கொள்முதல் செய்யப்படும். இதில் வியாபாரிகள் இடைத்தரகர்களாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அல்லிவிளாகம் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகளை கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு அறுவடைக்கு தயாராக உள்ளதா என ஆய்வு செய்தார்.ஆய்வுக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

9-ந் தேதி முதல் தொடக்கம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதற்காக கரும்பு கொள்முதல் செய்ய ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி வருகிற 9-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது.

இடைத்தரகர்களாக செயல்பட்டால் நடவடிக்கை

பொங்கல் பரிசு தொகுப்பிற்காக விவசாயிகளிடம் இருந்து வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து பன்னீர் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில் வியாபாரிகள் இடைத்தரகர்களாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story