குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்


குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
x

வேலூரில் குடித்துவிட்டு ஆட்டோக்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

வேலூரில் குடித்துவிட்டு ஆட்டோக்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் 58 இடங்களில் ஆட்டோ ஸ்டேண்ட் உள்ளன. சுமார் 3 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. சில ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் சில ஆட்டோ டிரைவர்கள் வாடகை கட்டணம் அதிகம் நிர்ணயித்து வசூலிப்பதாகவும், அதனால் வாடிக்கையாளருக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஆட்டோக்களை ஒழுங்கு படுத்துவதற்காக ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நடந்தது. போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வரவேற்றார்.

கூட்டத்தில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

கடும் நடவடிக்கை

வேலூர் மாநகரப் பகுதியில் போக்குவரத்திற்கு இடடையூராக சில ஆட்டோ டிரைவர்கள் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி ஆட்களை ஏற்றி செல்வதாக தொடர்ந்து புகார் வருகிறது. இவ்வாறு நடந்து கொள்ளும்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் வேலைக்கு செல்பவர்கள், நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். ரெயில்களை பிடிக்க செல்பவர்கள் அதனை விட்டு விடவும் வாய்ப்பு உள்ளது. இது போன்றவற்றுக்கு நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது. உங்களை ஏன் நீங்களே திருத்திக்கொள்ள கூடாது.

போலீசார் அபராதம் விதித்தால் உங்களுக்கு கஷ்டம் ஏற்படுவதாக கூறுகிறீர்கள். அதனால் உங்களை நீங்களே முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். சாலை விதிகளை முழுமையாக ஆட்டோ டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டும். குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் வெளியூர் ஆட்டோக்களை கொண்டு வந்து வேலூரில் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் ஆட்டோ டிரைவர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆட்டோ டிரைவரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் போலீசார் கூறுகையில், மது குடித்துவிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ ஓட்டினால் அவர்களை கைது செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது என்றனர்.


Next Story