நெல்லை ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு


நெல்லை ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு
x

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். புளியரையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்தது

திருநெல்வேலி

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். புளியரையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்தது.

மங்களூரு குண்டு வெடிப்பு

கர்நாடக மாநிலம் மங்களூருவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின் பேரில் வழக்கமாக நடைபெறும் இரவு ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் மற்றும் மாநகர எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் நேற்று முன்தினம் இரவு முதல் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு சோதனை நடந்தது.

2-வது நாளாக சோதனை

தொடா்ந்து 2-வது நாளாக நேற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட திருச்செந்தூர், செங்கோட்டை பயணிகள் ரெயில் மற்றும் சென்னையில் இருந்து வந்த நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும், பயணிகளின் உடைமைகளிலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

அதேபோல் கோவை, பெங்களூருவில் இருந்து வந்த ரெயில்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

தண்டவாளங்கள்

மேலும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் சத்திய தாஸ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், சங்கர் மற்றும் மோப்பநாய் பிரிவு மகாராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பார்சல் சேவை அலுவலகங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாக சோதனை செய்தனர்.

தண்டவாளங்கள், நடைமேடைகள் உள்ளிட்டவை மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு மூலம் சோதனை செய்யப்பட்டது. ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

புளியரை சோதனை சாவடி

இதேபோல் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரை மற்றும் மேக்கரை சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களையும், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களையும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் வருபவர்களின் உடைமைகளை மெட்டல் டிெடக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே செல்ல போலீசார் அனுமதிக்கின்றனர்.


Next Story