ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம்


ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
x

சேலம் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

சேலம்

சேலம்:

ரேஷன் கடை பணியாளர்கள்

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் தங்களின் 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 7-ந் தேதி (நேற்று) முதல் 9-ந் தேதிவரை மாநிலம் தழுவிய 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தை நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். இதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி சேலம் புறநகர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாநகரில் ஒரு சில கடைகள் மட்டுமே மூடப்பட்டு இருந்தன. பெரும்பாலான ரேஷன் கடைகள் வழக்கம் போல திறந்து இருந்தன.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாநில துணைத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகராசன், பொருளாளர் சுந்தர்ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பொது வினியோக திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்க வேண்டும். அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீதம் அகவிலைப்படியுடன், 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய சம்பள உயர்வை ஒரே மாதிரியாக வழங்க வேண்டும்.

மாத இறுதியில் சம்பளம்

அனைத்து ரேஷன் கடைகளுக்கும் புதிய 4ஜி' சிம் கார்டு வழங்க வேண்டும். ஊழியர்களை தற்காலிகமாக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும். அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதம் இறுதியில் சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதில் சங்க மாவட்ட செயலாளர் சு.சுந்தர்ராசன், மாநகர செயலாளர் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.

இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறும் போது, கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி உள்ளது. சேலம் மாவட்டத்தில் சுமார் 700 ரேஷன் கடைகள் மூடப்பட்டு அதில் பணியாற்றும் ஏராளமான பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உள்ளோம் என்றனர்.


Next Story