ஓசூர் அருகே பட்டா வழங்க வலியுறுத்திவீடுகளில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
ஓசூர்
ஓசூர் அருகே பட்டா வழங்க வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்புக்கொடி கட்டி போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா சென்னசந்திரம் ஊராட்சிக்குட்பட்ட சென்னசந்திரம், மாரசந்திரம், உளியாளம் உள்ளிட்ட 7 கிராமங்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வீட்டு மனைப்பட்டா, விவசாய நிலப்பட்டா மற்றும் அரசின் அனைத்து சலுகைகளையும் வழங்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரியில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமமக்கள் மனு கொடுத்தனர். இந்த நிலையில் உளியாளம் கிராம மக்கள் பட்டா வழங்க வலியுறுத்தி நேற்று வீடுகள் மீது கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தியவாறு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணாவிடில், உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்தனர். வீடுகளில் கிராம மக்கள் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.