டிரான்ஸ்பார்மர், மின்கம்பத்தில் ஏறி அரசு ஊழியர் உள்பட 2 பேர் போராட்டம்


டிரான்ஸ்பார்மர், மின்கம்பத்தில் ஏறி அரசு ஊழியர் உள்பட 2 பேர் போராட்டம்
x

பென்னாகரம் அருகே விவசாய கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில், டிரான்ஸ்பார்மர், மின்கம்பத்தில் ஏறி அரசு ஊழியர் உள்பட 2 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

பென்னாகரம்

விவசாயி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கே.அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் குரு (வயது 35), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மகன் வினோத் (32). இவர் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

உறவினர்களான பழனிக்கும் கருப்பண்ணனுக்கும் இடையே கிணற்றில் இருந்து விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை இருதரப்பினரும் கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

டிரான்ஸ்பார்மர், மின்கம்பம்

அப்போது திடீரென தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது திடீரென வினோத் அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறினார். முன்னதாக அதன் மின் இணைப்பை துண்டித்தார். இதைத்தொடர்ந்து குருவும் அதே பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மேலே அமர்ந்து இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பென்னாகரம் மின்வாரிய உதவி பொறியாளர் திருச்செல்வன், பணியாளர்கள் பிரகாசம், கணேசன் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஒகேனக்கல் போலீசார் இரு தரப்பையும் அழைத்து சமரசம் செய்தனர். தொடர்ந்து மின் இணைப்பை துண்டித்தது தொடர்பாக உதவி பொறியாளர் திருச்செல்வன் ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது தரப்பினர் கொடுத்த புகார்களின் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிரான்ஸ்பார்மர், மின்கம்பத்தில் ஏறி அரசு ஊழியர் உள்பட 2 பேர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story