ஓசூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்


ஓசூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
x

விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஓசூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 315 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஓசூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 315 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டம்

பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜி.எஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கட்சி ஒசூரில் ரெயில் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக கட்சி நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக ரெயில் நிலையம் வரை வந்தனர். இதில், கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் லகுமய்யா, மாவட்டக்குழு உறுப்பினர் மாதையன் உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

315 பேர் கைது

பின்னர் ரெயில் நிலையம் முன்பு சாலையில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையிலான போலீசார், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 315 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஓசூர்- தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போலீஸ் காவலில் வைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னதாக, மகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், வருகிற 2024 தேர்தலில், நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றுதிரட்டி பா.ஜ.க. அரசை ஆட்சியில் இருந்து அகற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி களம் இறங்கி உள்ளது. எங்களை சிறையில் அடைத்தாலும் சரி, சித்ரவதை செய்தாலும் சரி, மத்திய அரசை அகற்றும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று கூறினார்.


Next Story