ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் போராட்டம்
ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோரிக்கை மனு
கீழ்பவானி வாய்க்கால் மூலமாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து இந்த வாய்க்காலுக்கு நன்செய் பாசனத்துக்கும், புன்செய் பாசனத்துக்கும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இந்தநிலையில் கீழ்பவானி வாய்க்காலில் முறை வைத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். முறை வைத்து தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள்.
எனவே முறை வைத்து தண்ணீர் திறக்கப்படுவதை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு நேற்று மனு கொடுப்பதற்காக விவசாயிகள் வந்தனர். அவர்கள் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணனிடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு, முறை வைத்து தண்ணீர் திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
காத்திருப்பு போராட்டம்
இதற்கிடையே கீழ்பவானி வாய்க்காலில் முறை வைத்து தண்ணீர் திறப்பதை கைவிட கூடாது என்று மற்றொரு தரப்பு விவசாயிகளும் கோரிக்கை மனு கொடுத்தார்கள். இதனால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முறை வைத்து தண்ணீர் திறக்கும் திட்டத்தை கைவிடக்கூடாது என்று கூறியபடி விவசாயிகள் கோஷங்களை எழுப்பியபடி அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
மேலும், முறை வைத்து தண்ணீர் திறப்பை கைவிடக்கோரி வந்த விவசாயிகள் திடீரென பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். முறை வைத்து தண்ணீர் திறக்கப்படாது என்று அறிவிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க தலைவர் எஸ்.பெரியசாமி கூறுகையில், "கீழ்பவானி வாய்க்காலில் ஒரு நாளுக்கு 13 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை. எனவே இதை கைவிட்டு அரசு உத்தரவின்படி 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்", என்றார்.
பேச்சுவார்த்தை
பொதுப்பணித்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள், "நடவு பணிகள் முடியும் வரை முறை வைத்து தண்ணீர் திறப்பது நிறுத்தி வைக்க பரிந்துரை செய்யப்படும்", என்று உறுதிஅளித்தனர். அதன்பிறகு விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.