மொடக்குறிச்சி, சத்தியில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மொடக்குறிச்சி, சத்தியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மொடக்குறிச்சி, சத்தியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் வேலை நாட்களை 150 நாட்களாக அதிகரிக்க வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மொடக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ராசன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் வேலை தொடங்கும் நேரத்தை காலை 9 மணி என திருத்திட வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி 300 ரூபாய் வழங்க வேண்டும். உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து 60 வயது நிரம்பிய அனைவருக்கும் மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும்.
விரிவுபடுத்த வேண்டும்
100 நாள் வேலையை பேரூராட்சி, நகராட்சி கூலி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் விரிவு படுத்த வேண்டும். தற்போது வழங்கி வரும் முதியோர் உதவித் தொகையை குறைக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாநில செயலாளர் சின்னசாமி, மாதேஸ்வரன், சேகர், மணியன், சண்முகம் உள்ளிட்ட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
சத்தியமங்கலம்
இதேபோல் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகில் நேற்று காலை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சி.கே.முருகன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 100 நாளை 150 நாளாக அதிகரிக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பினார்கள்.