மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியேறும் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான தர்மபுரி மாவட்ட சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடியேறும் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு சங்க மாநில தலைவர் வில்சன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் நம்புராஜன் முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் காரல் மார்க்ஸ், தர்மபுரி மாவட்ட தலைவர் கரூரான், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் தமிழ்செல்வி, நிர்வாகி சக்ரவர்த்தி மற்றும் நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்தின் போது கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கிராம சபை கூட்டத்திற்கு கலெக்டர் சென்று விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

சாலை மறியல்

இதை ஏற்று கொள்ளாத மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி-சேலம் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த வரவேண்டும் என கோரிக்கையை அவர்கள் முன் வைத்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு நாகலிங்கம், தாசில்தார் ராஜராஜன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டரை மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் தேதி தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story