3-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்


3-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊரை காலி செய்து கூடாரத்தில் தங்கி கிராம மக்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூடாரத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊரை காலி செய்து கூடாரத்தில் தங்கி கிராம மக்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூடாரத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரட்டகிரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சுற்றி 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லிகற்களை ஏற்றி கொண்டு டிப்பர் லாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் லாரிகள் செல்லும் போது எழும் தூசியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் அந்த கிராமமக்கள் கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குவாரிகளை மூடக்கோரியும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கால்நடைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் ஊரை காலி செய்து அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் கிராமமக்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3-வது நாளாக...

இந்தநிலையில் நேற்று சப்-கலெக்டர் சரண்யா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசார் கல் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அவர்கள் கிராம மக்களை சந்தித்து பேசினார். அப்போது போராட்டத்தை கைவிடுமாறும், மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் எழுத்துப்பூர்வமாக எங்களது கிராமத்திற்குள் லாரிகள் வராது என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். அதனால் சப்-கலெக்டர் சரண்யா மற்றும் அலுவலர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். தொடர்ந்து கிராம மக்கள் 3-வது நாளாக நேற்றும் கூடாரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு கூடாரத்தில் பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story