5-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்


5-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் நேற்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் நேற்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல் குவாரிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கொரட்டகிரி கிராமத்தின் அருகே 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து லாரிகளில் ஜல்லி, எம்சாண்ட் ஏற்றி கொண்டு செல்கின்றன. இதனால் சாலைகள் மோசமாகி உள்ளதால் கிராமமக்கள் சிரத்திற்கு ஆளாகினர். கல் குவாரிகளுக்கு லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கடந்த 11-ந் தேதி கிராம மக்கள் கால்நடைகளுடன் கிராமத்தை விட்டு வெளியேறி அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரங்களை அமைத்து தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து கிராம மக்கள் அங்கே உணவு சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு செல்லக்குமார் எம்.பி. அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களுடன் கூடாரத்தில் படுத்து உறங்கினார்.

5-வது நாளாக போராட்டம்

இந்தநிலையில் கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றும் கிராம மக்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் செல்லக்குமார் எம்.பி.யும் போராட்டத்தில் ஈடுபட்டார். தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர் நாகராஜ், தாசில்தார் சரவணன் மற்றும் மற்றும் மற்றும் போலீசார் அங்கேயே காத்திருந்தனர். இதனிடையே கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

போராட்ட திடலில் செல்லக்குமார் எம்.பி. கூறுகையில், கடந்த 5 நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்திற்கு முன் நிற்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. நடக்க கூட முடியாத முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்கின்றனர். மக்களின் பிரச்சினையை தடுத்து நிறுத்துவதை அதிகாரிகள் செய்யவில்லை. பாதிக்கப்பட்டுள்ள மக்களோடு நானும் பங்கேற்க தான் அவர்களுடன் தங்கியிருந்தேன். இக்கிராம மக்கள் நல்ல சுற்றுச்சூழலுடன் வாழ வழி ஏற்படுத்தி மக்கள் குழந்தைகள் நிம்மதியாக வாழும் வரை நானும் அவர்களுடன் இருப்பேன் என்று கூறினார்.


Next Story