பொதுமக்கள் தர்ணா போராட்டம்
பத்தலபள்ளி அருகே சாலை வசதி செய்து தர வலியுறுத்தி ஓசூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்
பத்தலபள்ளி அருகே சாலை வசதி செய்து தர வலியுறுத்தி ஓசூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்ப்பிணிகள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பத்தலபள்ளி காய்கறி மார்க்கெட் பின்புறம் சாரல் நகர், செர்ரி ஹோம்ஸ், சுனில் நகர், சுவீட் ஹோம்ஸ், பாவை கார்டன், விஷ்ணு நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மேலும் சாலை சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாகவும் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் வாகன ஓட்டிகள் அந்த பகுதிக்கு வர மறுத்து விடுகின்றனர். இதனால் கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகினர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
தர்ணா போராட்டம்
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஓசூர் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் சாலை வசதி செய்து தரக்கோரி திடீரென தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தாசில்தார் கவாஸ்கர் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். அப்போது சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்துஉரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.