சாலை பணியாளர்கள் போராட்டம்
கிருஷ்ணகிரியில் சாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் எதிரே முக்காடு போட்டு போராட்டம் நடந்தது. கோட்ட தலைவர் தேவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுபாஷ்சந்திரபோஸ், வட்ட தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திம்மராஜ், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம், மாவட்ட மகளிர் அமைப்பாளர் ஜகதாம்பிகை, கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சிவலிங்கம், மருந்தாளுனர் சங்க மாநில செயலாளர் பெருமாள், சாலை பணியாளர் சங்க மாநில பொருளாளர் நந்தகுமார், முன்னாள் மாவட்ட செயலாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கூபல்லியப்பா நன்றி கூறினார்.
இந்த போராட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இதே போல் பணிநீக்க காலம், தற்போதைய பணிக்காலத்தில் உயிரிழந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு கருவி தளவாடங்கள், கத்தி, மண்வெட்டி, காலணிகள், மழைகோட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினார்கள். இதில் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.