சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 4 மாணவிகள் பெற்றோருடன் போராட்டம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் கல்வி மாற்றுச்சான்றிதழில் நன்னடத்தை குறிப்பை சரியாக வழங்கக்கோரி 4 மாணவிகள் நேற்று பெற்றோருடன் வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருப்பூர்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் கல்வி மாற்றுச்சான்றிதழில் நன்னடத்தை குறிப்பை சரியாக வழங்கக்கோரி 4 மாணவிகள் நேற்று பெற்றோருடன் வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவிகள் போராட்டம்
சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்குள்ள வரலாற்று துறையில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி மாற்றுச்சான்றிதழில் சிலருக்கு மட்டும் நன்னடத்தை குறிப்பு திருப்தி இல்லை என்று வழங்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் 4 பேர் தங்களது பெற்றோருடன் நேற்று பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் துணைவேந்தர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த பதிவாளர் ஆர்.பாலகுருநாதன், நூலகர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மாணவிகளிடம் பேசி அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் கல்வி சான்றிதழ் குறித்து மாணவிகளிடம் மனுவாக பெற்றுக்கொண்டனர்.
தனித்தனி மனுக்கள்
இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட மாணவிகள், தங்களுடைய மாற்றுச்சான்றிதழில் திருப்தி இல்லை என குறிப்பிட்டுள்ளதை மாற்றித்தருமாறு தனித்தனியே மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் மீது துணைவேந்தரின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதை ஏற்று மாணவிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
மாணவிகள் போராட்டம் காரணமாக பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
துணைவேந்தர் விளக்கம்
இதுகுறித்து துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் கூறியதாவது:-
பெரியார் பல்கலைக்கழக விதிகளுக்கு எதிராக நடந்து கொண்ட ஆசிரியர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் ஒரு சில மாணவர்கள் தவறாக நடந்து கொண்டனர். இதனால் மாற்றுச்சான்றிதழில் திருப்தி இல்லையென பதிவு செய்யப்பட்டுள்ளது. இது என் கவனத்திற்கு வந்தது. உடனே ஆய்வு செய்யப்பட்டு, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி உரிய மாற்றுச்சான்றிதழ் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் இதனால் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் கூறினார்.