கருப்பு பேட்ஜ் அணிந்து ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்


கருப்பு பேட்ஜ் அணிந்து ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.

சிவகங்கை


12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.

போராட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் கூறியதாவது:-

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் பொழுது பணிக்கொடையாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். மாத ஓய்வூதியமாக ரூ.5,000 வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூ.15,000 தொகுப்பு ஊதியமாக கருவூலம் மூலம் வழங்க வேண்டும்.

கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்ட கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

1,500 பேர்

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு நீண்ட நாட்களாக வெளியிடப்படாமல் உள்ள பணி விதிகள் அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும், காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்யும் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த போராட்டத்தில் 1,500 பேர் கலந்து கொண்டனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து மாநில சங்கத்தின் மூலம் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story