விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
கிருஷ்ணகிரி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள தளவாய்ப்பள்ளியில், ஆதிதிராவிட நலத்துறை சார்பில் அப்பகுதியில் வசிக்கும், 24 பேருக்கு, 1.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அவற்றை சம்பந்தப்பட்டவர்களிடம் அதிகாரிகள் ஒப்படைக்கவில்லை. இதில், அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தளவாய்ப்பள்ளியில் அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மாதேஷ், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிலத்தை அளவீடு செய்து தராத தனி தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அந்த நிலத்தில் அவர்களாகவே குடிசை அமைக்க முற்பட்டனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் தாசில்தார் சம்பத், தனி தாசில்தார் கோவிந்தராஜ் ஆகியோர் உடனடியாக நிலத்தை அளந்து சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக நிலம் முற்றுகை போராட்டம் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன், மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.