உத்தனப்பள்ளியில் 154-வது நாளாக போராட்டம்:சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம்
ராயக்கோட்டை
சிப்காட்டுக்கு எதிர்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த அயர்னப்பள்ளி, நாகமங்கலம், உத்தனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 5-வது சிப்காட் அமைக்க அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று 154-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்த உண்ணாவிரதம் நேற்று 3-வது நாளாக நடந்தது. நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்த 3 விவசாயிகள் மயக்கமடைந்த நிலையில் அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பின்னர் நேற்று நடந்த உண்ணாவிரதத்தில் அவர்கள் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வலியுறுத்தி ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. உதவி கலெக்டர் சரண்யா விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உறுதியான முடிவு எட்டப்படாததால் போராட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் மற்றும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.