சிதம்பரத்துக்கு குடிநீர் கொண்டு செல்ல எதிர்ப்பு:கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்த 10 கிராம மக்கள் முடிவு
சிதம்பரத்துக்கு குடிநீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தொிவித்து, கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்த 10 கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில்,
குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு
சிதம்பரத்திற்கு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குமராட்சி அருகே ம.புளியங்குடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக ஆற்றில் உறிஞ்சு கிணறுகள் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
இதுபற்றி அறிந்த கிராமத்து மக்கள் ஏற்கனவே இங்கிருந்து சிதம்பரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் எங்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது புதிதாக செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்தின் மூலம் மேற்கொண்டும் பாதிப்பு ஏற்படும், எனவே கூடுதலாக குடிநீர் எடுத்துக்செல்லக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தற்காலிகமாக பணிகள்ட நிறுத்தப்பட்டது.
10 கிராம மக்கள் ஆலோசனை
இதையடுத்து காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் அதிகாரிகள் கிராமத்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் குடிநீர் திட்டத்தை செயல்படுத்திக்கொள்ளுங்கள், ஆனால் எங்களுக்கு நிலத்தடி நீர் பாதிக்காமல் இருக்க கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்துக் கொடுங்கள் என்று கூறினர். இது குறித்து உயர் அதிகாரியிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ம.புளியங்குடி, வாண்டையார்இருப்பு, தில்லைநாயகபுரம் உள்ளிட்ட சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ம.புளியங்குடி கொள்ளிடம் ஆற்று படுகையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கிராமத்து மக்கள் என்று அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.
போராட்டம் நடத்த முடிவு
கூட்டத்தில், இந்த பிரச்சினை தொடர்பாக விரைவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசுவது, வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கொள்ளிடம் கரையோரம் உள்ள அனைத்து கிராமங்களிலும் புதிதாக செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், போராட்டங்களை ஒருங்கிணைக்க ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் பிரதிநிதிகளை சேர்த்து குழு அமைப்பது, கொள்ளிடம் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதில் விவசாய சங்க தலைவர் விநாயகமூர்த்தி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டசெயலாளர் செல்வ மகேஷ், செல்வகுமார், என்.ஆர்.எஸ். பாண்டியன் அன்பழகன், பாலசுப்பிரமணியன், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் அன்பழகன், முத்து, பாஸ்கர், ஒன்றிய செயலாளர் பார்த்திபன், நகர செயலாளர் டாக்டர் அன்பு சோழன் மற்றும் விவசாயிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.