கோத்தகிரியில் பழைய உழவர் சந்தையை மீண்டும் திறக்கக்கோரி போராட்டம்
கோத்தகிரியில் பழைய உழவர் சந்தையை மீண்டும் திறக்கக்கோரி போராட்டம் நடைபெற்றது.
கோத்தகிரி
கோத்தகிரியில் ஏற்கனவே உள்ள பழைய உழவர் சந்தையை மேம்படுத்தி மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முற்போக்கு மக்கள் மேடை சார்பில் கோத்தகிரியில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தில் கோத்தகிரி பகுதியில் பழைய உழவர் சந்தைக்கு மாற்றாக மார்கெட் பகுதியில் உள்ள கடைகளை அகற்றி புதிய உழவர் சந்தை அமைக்கக் கூடாது. இதனால் கடை இழக்கும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் பேரூராட்சிக்கும் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே பழைய உழவர் சந்தையை புதுப்பித்து, மேம்படுத்தி செயல்படுவதற்கு ஏதுவாக, உழவர் சந்தை வழியாக மினி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம், கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்துக் கொண்டனர்.