அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு: முகத்தில் கருப்பு துணி கட்டியபடி விவசாயிகள் குடும்பத்தோடு போராட்டம்
அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தொிவித்து முகத்தில் கருப்பு துணி கட்டியபடி விவசாயிகள் குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள தேத்தாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது கல்லுமேடு கிராமம். இங்கு சுமார் 40 ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இதில் சுமார் 10 ஏக்கர் நிலத்தை சரி செய்து அதில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், விவசாயநிலமாக மக்கள் பயன்படுத்தி வரும் இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, அந்த இடத்தில் அரசு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு தேர்வு செய்தனர். மேலும் அங்கு எல்லை கற்களையும் அவர்கள் நட்டு சென்றனர்.
முகத்தில் கருப்பு துணி கட்டி போராட்டம்
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நிலத்தை பயன்படுத்தி வரும் விவசாய குடும்பத்தினர், நாங்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வரும் இடத்தில் இருந்து அதிகாரிகள் திடீரென எங்களை அப்புறப்படுத்த முடிவு செய்து இருப்பது எங்களது வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் செயலாகும் என்று கூறி நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, பிரச்சினைக்குரிய நிலத்தில் பயிர் செய்துள்ள பயிர்களுக்கு நடுவில் விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஏராளமானவர்கள் தங்களது முகத்தில் கருப்பு துணி கட்டியபடி அமர்ந்து அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினர். அப்போது, உங்கள் குறைகளை மனுவாக தாலுகா அலுவலகத்தில் அளித்து அதன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.