கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்
தேனியில் நடந்த வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் அளிக்கப்பட்டது. அவரின் இதயம், நுரையீரல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.
தேனியில் நடந்த வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் அளிக்கப்பட்டது. அவரின் இதயம், நுரையீரல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.
கல்லூரி மாணவர் மூளைச்சாவு
தேனி மாவட்டம் கம்பம் அருகே உத்தமபாளையத்தை சேர்ந்தவர் முத்தரசு. ஓட்டல் தொழிலாளி. இவருடைய ஒரே மகன் சக்திகுமார் (வயது 18). அங்குள்ள கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 18-ந் தேதி கட்டணம் செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சக்திகுமாரை அனுமதித்தனர். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. எனவே அவரது உடலின் பிற உறுப்புகளான இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதயம்
அதை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை அகற்றுவதற்கு தமிழக அரசு மற்றும் மருத்துவ துறையிடம் அனுமதி கோரப்பட்டது. அரசு அனுமதி வழங்கிய நிலையில், மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மூளைச்சாவடைந்த சக்திகுமாரின் உடல் உறுப்புகளை நேற்று அகற்றினர்.
அவரிடமிருந்து பெறப்பட்ட ஒரு சிறுநீரகமும், கல்லீரலும் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் இரு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் திருச்சி காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதயம், நுரையீரல் சென்னையிலுள்ள அப்போலோ ஆஸ்பத்திரிக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
13 நிமிடத்தில்...
அதன்படி விமான நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் உறுப்புகளை கொண்டு செல்லவும், ஆம்புலன்ஸ் எவ்வித இடையூறு இல்லாமல் செல்லவும் மதுரை மாநகர போக்குவரத்து போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.
உடனே மதுரை தலைமையிட போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா மேற்பார்வையில், உதவி கமிஷனர் திருமலைக்குமார், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள், 30 போலீசார் மூலம் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
போலீசார் இந்த நடவடிக்கையால், ேநற்று மதியம் 12.30 மணிக்கு உறுப்புகள் வைத்திருந்த பெட்டி ஆம்புலன்ஸ் மூலம் 13 நிமிடத்தில் மதுரை விமான நிலையத்தை அடைந்தது. பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. சக்திகுமாரின் உடல் உறுப்புகள் தானத்தால் 5 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
சக்திகுமாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்த அவரது குடும்பத்தினருக்கு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நிர்வாகிகளும், உறுப்புகளை தானமாக பெற்ற நோயாளிகளின் குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்.