மாணவர்கள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருப்பூரில் ஆசிரியர் தரக்குறைவாக திட்டுவதாக கூறி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருப்பூரில் ஆசிரியர் தரக்குறைவாக திட்டுவதாக கூறி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி மாணவர்கள் போராட்டம்
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் சின்னச்சாமியம்மாள் மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நேற்று காலை 9.30 மணி அளவில் பள்ளி வளாகத்தில் திரண்டு நின்று வகுப்பறைக்கு செல்லாமல் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் இருவர் தங்களை தரக்குறைவாக திட்டுவதாகவும், கைகளில் கயிறு கட்டக்கூடாது என்று திட்டுவதாகவும் புகார் தெரிவித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் மாணவர்கள் தலைமுடியை அதிகமாக வளர்த்தும், கைகளில் பிளாஸ்டிக் பட்டைகள் உள்ளிட்டவற்றை அணிந்து வரக்கூடாது என்று ஆசிரியர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பள்ளியில் ஆசிரியர்கள் 2 பிரிவாக இருப்பதால் இந்த பிரச்சினை தலைதூக்கியதாகவும் தெரிவித்தனர்.
அதிகாரி விசாரணை
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். மேலும் கல்வித்துறை அதிகாரிகளும் வந்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.
இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வியிடம் கேட்டபோது, பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை தரக்குறைவாக திட்டுவதாகவும், அதை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரி சென்று விசாரணை நடத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோல் புகார் வந்துள்ளது. வெளியூரில் நான் இருப்பதால் வருகிற 25-ந் தேதி பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.