பழங்கால பொருட்களை பார்த்து ரசித்த மாணவர்கள்
பழங்கால பொருட்களை மாணவர்கள் பார்த்து ரசித்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் புது ரோடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று தொல்லியல் பொருட்கள் கண்காட்சி மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் ஜெனோபா தலைமை தாங்கினார். ஆசிரியர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாணவி நம்பீஸ்வரி வரவேற்றார். விழாவில் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, கீழடி அகழாய்வுக்குபின் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் தொல்லியலை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரித்து உள்ளது. பள்ளிகளில் செயல்பட்டு வரும் தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் மூலம் நடத்தப்படும் தொல்லியல் கண்காட்சி பயிற்சிகள் மூலம் மாணவர்களிடம் தொல்லியல் அகழாய்வு, பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இவர் அவர் பேசினார். பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த தொல்லியல் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பழமையான பழைய, புதிய நுண் கற்கால கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானைகளுடன் உலக பாரம்பரிய சின்னங்கள், சேதுபதி கோட்டைகள், குடைவரை கோவில்கள் உள்ளிட்ட அரிய வகை புகைப்படங்களையும் பழமையான பொருட்களையும் மாணவ-மாணவிகள் பார்த்து ரசித்தனர். விழாவில் தொன்மை பாதுகாப்பு மன்ற செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.