டி.என்.பாளையம் அருகே பள்ளிக்கூட மாணவர்கள் உருவாக்கிய சோலார் சைக்கிள்
டி.என்.பாளையம் அருகே பள்ளிக்கூட மாணவர்கள் உருவாக்கிய சோலார் சைக்கிள்
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே பெருமுகைபுதூர் ஊராட்சிக்கு உள்பட்ட வரப்பள்ளம் பகுதியில் செயல்பட்டு வரும் கொங்கு வித்யாலயா மெட்ரிக் பள்ளிக்கூட 9-ம் வகுப்பு மாணவர்கள் டி.நவீன்குமார், எஸ்.ஆர்.சபரி. இவர்கள் 2 பேரும் பேட்டரி சைக்கிளில் பள்ளிக்கு வந்து சென்று உள்ளனர்.
இந்த நிலையில் இந்த சைக்கிளை இணைந்து 2 பேரும் சோலாரில் இயங்கும் சைக்கிளாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பகல் நேரத்தில் சூரிய ஒளியால் சோலார் தகடுகள் மூலமாகவும், இரவு நேரத்தில் சோலார் மின்கலம் (சேமிப்பு பேட்டரிகள்) மூலமாகவும் இந்த சோலார் சைக்கிளை இயக்கி செல்லும் வகையில் உருவாக்கினர்.
இதைத்தொடர்ந்து இந்த சோலார் சைக்கிளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கொங்கு வித்யாலயா பள்ளிக்கூட வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கூட முதல்வர் நளினி செங்கோட்டையன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியின்போது மாணவர்கள் நவீன்குமார், சபரி கூறும்போது, 'இந்த சோலார் சைக்கிளை பள்ளியின் கணித ஆசிரியர் சங்கர் உதவியுடன் உருவாக்கினோம். ஊக்கப்படுத்திய பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்' என்றனர். மேலும் சோலார் சைக்கிளை உருவாக்கிய மாணவர்களை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.