பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை-கலெக்டர் விஷ்ணு தகவல்


பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை-கலெக்டர் விஷ்ணு தகவல்
x

நெல்லை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

மாணவர் சேர்க்கை

நெல்லை மாவட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டுக்கான பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் அரசு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்காக 23 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் பள்ளி விடுதிகளில் 4 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளும் சேர தகுதியானவர்கள்.

சலுகைகள்

இந்த விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் உணவு வழங்கப்படும். 10-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கப்படும். 10 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

விடுதியில் சேரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவர்களின் இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவர்கள் இதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

பள்ளி விடுதிகளை பொறுத்தவரை மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வருகிற 30-ந்தேதிக்குள் (வியாழக்கிழமை) வழங்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதிக்குள் வழங்க வேண்டும். விண்ணப்பத்துடன் சாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழை இணைத்து அனுப்பலாம். அல்லது விடுதியில் சேரும் போது வழங்கலாம்.

அனைத்து விடுதிகளிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு விடுதியிலும், மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்து கொள்ளவும், அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கி பயிலவும் அனுமதிக்கப்படுவர்.

தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டு கேரளாவில் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் தேனி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையோர பகுதிகளில் இயங்கும் விடுதிகளில் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் வழங்காமல் சுய உறுதிச்சான்றிதழ் அடிப்படையில் சேரலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story