'நீட்' தேர்வு முடிவு அச்சத்தால் தற்கொலைக்கு முயன்ற மாணவி
‘நீட்' தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்து விடுவோமோ? என்ற அச்சத்தில் பிளஸ்-2 மாணவி வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் கடந்த 17-ந் தேதி மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான 'நீட்' நுழைவு தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்று 'நீட்' தேர்வை எழுதினார்கள்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பத்தை சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவி 'நீட்' தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், 'நீட்' தேர்வில் தான் குறைவான மதிப்பெண்கள் எடுத்து விடுவோமோ? என்ற பயத்தில் அந்த மாணவி தன்னுடன் பயிலும் சக மாணவிகளிடம் கூறி புலம்பி வந்தார்.
இதில் மனமுடைந்த மாணவி, வீட்டில் இருந்த வார்னிசை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், மாணவியை திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது மாணவியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.