மாணவர் திராவகம் குடித்து தற்கொலை
கோவில்பட்டியில் நீட் தேர்வு மையத்தில் படித்த மாணவர் மாதாந்திர தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நீட் தேர்வு மையத்தில் படித்த மாணவர் மாதாந்திர தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வு பயிற்சி மைய மாணவர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் லெனின் சங்கர். கூலி தொழிலாளி. இவருடைய மகன் மனோ நாராயணன் (வயது 20).
இவர் பிளஸ்-2 படித்து விட்டு, மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதற்காக கோவில்பட்டியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார்.
குறைந்த மதிப்பெண் பெற்றதால்...
பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட மாதாந்திர தேர்வில் மனோ நாராயணன் குறைந்த மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மனோ நாராயணன் தனது வீட்டில் தரையை துடைக்க பயன்படுத்தும் திராவகத்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.
சாவு
உடனே அவரை குடும்பத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக கோவில்பட்டி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி மனோ நாராயணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்த மாணவர் மாதாந்திர தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் திராவகம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
----