பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை


பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை
x

ஆத்தூர் அருகே பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-2 மாணவி

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வம், லாரி டிரைவர். இவருடைய மனைவி பூங்கொடி.

இவர்களுடைய மகள் காவியா (வயது 17). இவர் ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில் மாணவி காவியா 600 மதிப்பெண்ணுக்கு 370 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாணவி காவியா 500-க்கு 430 மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்.

தற்கொலை

பிளஸ்-2 பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், மனவேதனை அடைந்த மாணவி காவியா நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட மாணவி காவியாவின் உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி காவியாவின் உடலை பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

ஆத்தூர் அருகே மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story